கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்த வீரர் சாவு
தூத்துக்குடியில் கிரிக்கெட் போட்டியின் போது ரன் எடுக்க ஓடிய வீரர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் ஜான்சன் (46), நில புரோக்கர். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரரான இவர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நேற்று மீளவிட்டான் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார். இவர் போட்டியின் போது ரன் எடுக்க ஓடிய போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.