விடிய விடிய பெய்த பலத்த மழையால் நெல் அறுவடை பாதிப்பு விவசாயிகள் கவலை
மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று மதியம் முதல் லேசான மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. இந்நிலையில் மாலை 6 மணிக்குமேல் பரவலாக பலத்த மழை நள்ளிரவு வரை தொடர்ந்து கொட்டி தீர்த்தது;
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா தாளடி விவசாயம் 1.75 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்குமுன்பு நெல் அறுவடை துவங்கியது. நேற்று மாலையிலிருந்து நள்ளிரவு வரை நீடித்த மழையால் மயிலாடுதுறை 10.48 செ.மீ., மணல்மேடு 2.3 செ.மீ., சீர்காழி. 5.8 செ.மீ., கொள்ளிடம் 1.02செ.மீ., தரங்கம்பாடி 11.72செ.மீ., செம்பனார்கோவில். 11.46 செ.மீ., மழை பெய்துள்ளது இதனால் மாவட்டத்தின் நல்லத்துக் குடி கோடங்குடி மறையூர் பாண்டூர் அருண்மொழி தேவன், நல்லாடை, பெரம்பூர், சங்கரன் பந்தல், தரங்கம்பாடி, திருக்கடையூர், செம்பனார் கோவில் போன்றபல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கியதுடன் கதிர் முற்றிய பயிர்களும் வயலில் சாய்ந்துள்ளதால் தண்ணீரை வடிய வைக்க விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். பெஞ்சால் புயலிலிருந்து தப்பிய விவசாயம் ஒரு சில வாரங்களுக்கு முன்பு சில இடங்களில் புகையான் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தனர். தற்போது அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பயிர்கள் நிலத்தில் சாய்ந்துள்ளது. இவற்றை அறுவடை செய்வதற்கு வயல் முழுவதும் காய்ந்த பிறகு தான் அறுவை செய்ய இயலும் அதிலும் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அரசு உரிய கணக்கீடு எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.