தருமபுர ஆதீனம் திருவையாறு பயணம்

திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் இருந்து அடியவர்கள் புடைசூழ, யானை, குதிரை, ஆட்டுக்கிடா ஆகிய மங்கல சின்னங்கள் முன்செல்ல, வாத்தியங்கள் முழங்க தருமபுரம் ஆதீனகர்த்தர் குருலிங்க சங்கம பாத யாத்திரை புறப்பட்டார். வழியெங்கும் பக்தர்கள் பூரணகும்ப மரியாதை;

Update: 2025-01-19 16:29 GMT
தருமபுரம் ஆதீனத்தின் அருளாட்சிக்கு உள்பட்ட 28 கோயில்களுள் பஞ்சநதத்தலம் என்னும் திருவையாறு பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயிலும் ஒன்றாகும். திருநாவுக்கரசருக்கு கயிலைக் காட்சி அருளிய சிறப்புடையதும், சமயக்குரவர்கள் மூவரால் பாடல்பெற்றதுமான இக்கோயில் கும்பாபிஷேகம் பிப்.3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆதீனத்திருமடத்தில் இருந்து குருலிங்க சங்கம பாதயாத்திரை புறப்பட்டார். முன்னதாக, தருமையாதீன பூஜாமூர்த்தியான ஸ்ரீசொக்கநாத பெருமானை சிறப்பு வழிபாடு மேற்கொண்ட பின்னர், சொக்கநாத பெருமானை தலையில் சுமந்து, திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் கைலாகு கொடுக்க, அடியவர்கள் புடைசூழ, யானை, குதிரை, ஆட்டுக்கிடா ஆகிய மங்கல சின்னங்கள் முன்செல்ல, வாத்தியங்கள் முழங்க குருலிங்க சங்கம பாத யாத்திரை புறப்பட்டார். வழியெங்கும் குருமகா சந்நிதானத்துக்கு பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளின் முன்பு பூரணகும்ப மரியாதை அளித்தனர். மேலும், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சித் தலைவர் செல்வராஜ் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்களும் வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து, குத்தாலம், கஞ்சனூர், திருபுவனம், கும்பகோணம், சுவாமிமலை, கபிஸ்தலம், திருப்பழனம் வழியாக சென்று ஜன.25-ஆம் தேதி திருவையாறு அடையும் குருமகா சந்நிதானம், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உள்ளார்.

Similar News