கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழாவை
சிறப்பாக கொண்டாடிய தமிழக அரசுக்கு முத்தமிழ் மன்றம் பாராட்டு
நாகை மாவட்டம் திருக்குவளை நூலக வளாகத்தில், திருக்குவளை முத்தமிழ் மன்றமும், நூலக வாசகர் வட்டமும் இணைந்து பொங்கல் கலை விழா மற்றும் அய்யன் திருவள்ளுவர் நாள் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, முத்தமிழ் மன்ற தலைவர் கவிஞர் குவளை சோ.கணேசன் தலைமை வகித்தார். மன்ற செயலாளர் முல்லைப் பாண்டியன் முன்னிலை வகித்தார். நூலகர் தி.சங்கர் வரவேற்றார். விழாவில், கீழையூர் ஒன்றிய முன்னாள் தலைவர் ரா.காளிதாசனின் இலக்கிய பங்களிப்பை பாராட்டி சால்வை அணிவித்து பாராட்டப்பட்டது. மன்றப் பொருளாளர் க.ரவிச்சந்திரன் வாழ்த்திப் பேசினார். நாகை மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றி மறைந்த ராமலிங்கம் மகள் ப்ரீத்தி, மலேசியாவிற்கு சென்று பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்று வந்ததை பாராட்டி சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். மன்றப் பொதுச் செயலாளர் வெற்றிப்பேரொளி, நித்தமும் புத்தகம் என்ற தலைப்பில் பேசினார். சமீபத்தில், தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய கவிதைப் போட்டியில், முதல் பரிசு வெற்றிப் பேரொளிக்கு, முத்தமிழ் மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. குமரிக் கடலில் வள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு, வள்ளுவக்குறளும், குமரி வள்ளுவர் சிலையும் என்ற தலைப்பில், கவிஞர் செந்தூர்குமார் பேசினார். விழாவில், ஜெ.மு.ராதா, கவிஞர் அருவிதாசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுதா அருணகிரி, கவிஞர் ஜெ.வீரராசன், வேலாயுதம், முத்து துரைசாமி, ஏ.கே.ராஜேந்திரன், பாலாஜி, ஆசிரியர் மோகன்ராஜ் மற்றும் மாணவ, மாணவிகள் பேசினர். கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. முடிவில், நூலகர் கண்ணதாசன் நன்றி கூறினார்.