ஒரே பகுதியில் 2500 ஏக்கர் நெல் பயிர் மழைநீரில் மூழ்கியது
அறுவடை தொடங்கிய நாளன்று பெய்த பருவம் தவறிய கனமழை காரணமாக 2500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து அழுகியது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழையூர் கிராமத்தில் விவசாயிகள் 2500 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்திருந்தனர். கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில் கடந்த 18-ஆம் தேதி விவசாயிகள் அறுவடை பணிகளை தொடங்கினார். சுமார் ஐந்து ஏக்கரில் மட்டுமே அறுவடை நடைபெற்றிருந்த நிலையில், அறுவடை தொடங்கிய முதல் நாளிலேயே செய்த பருவம் தவறிய கனமழையின் காரணமாக அறுவடை பணிகள் தொடங்கிய நிலையிலேயே நிறுத்தப்பட்டன. தரங்கம்பாடி தாலுகாவில் ஒரே நாளில் 12 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்ததால், கீழையூர் கிராமத்தில் 2500 ஏக்கர் நெற்பயிர்களுமே முழுமையாக சேதம் அடைந்துள்ளன. இப்பகுதியில் வடிகால் வசதியும் சரிவர செய்து தரப்படாததால் தண்ணீர் வடிய வழி இன்றி நீரில் மிதக்கும் நெற்பயிர்கள் நாளைக்குள் முளைக்க தொடங்கும் அபாய நிலையில் உள்ளது. 100% பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கீழையூர் கிராமத்திற்கு முழு நிவாரண தொகையை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் காப்பீட்டு துறை அலுவலர்கள் கணக்கெடுப்பு நடத்தி காப்பீட்டுத் தொகையை அறிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.