தென்காசியில் வறட்டாற்றில் தடுப்பணை கட்ட அமைச்சரிடம் திமுக மனு
வறட்டாற்றில் தடுப்பணை கட்ட அமைச்சரிடம் திமுக மனு
சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி காசிதர்மம் கிராமத்திற்கு மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வறட்டாறு உற்பத்தியாகி காசிதர்மம் கிராமத்திற்கு கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் இடைகால் அணைக்கட்டு அருகில் ஆற்றில் சேர்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பொழிவு ஏற்படும்போது வறட்டாற்றில் நீர்வரத்து கிடைக்கப்பெறுகிறது. மேலும் ஆற்றுப்படுகையில் 6,500 மீட்டரில் வறட்டாற்றில் ஒரு பழைய தடுப்பணை உள்ளது. இந்த வறட்டாறு மூலமாக ராஜகோபாலப்பேரிகுளம், அதிவீரராமபேரிகுளம் மற்றும் சிறுகரைக்குடிகுளங்கள் வாயிலாக சுமார் 606.50 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. மேலும் வறட்டாற்றில் உள்ள தடுப்பணை கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி அன்று இரவு பெய்த பெருமழையினால் உடைந்து விட்டது. இந்த தடுப்பணை நிரந்தரமாக சீரமைப்பதற்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளால் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே வறட்டாற்றில் நிரந்தரமாக அணை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.