இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார். அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சுந்தரராஜபுரம் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.10 இலட்சம் அரசு மானியத்தில் புதிய வீடு கட்டப்பட்டு வருவதையும், ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.1.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர், சுந்தரராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்தும், பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடி குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, ஜமீன் கொல்லங்கொண்டான் ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, சிகிச்சை பெற வந்த தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அணுகுமுறைகள், சேவைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், நக்கனேரி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.10 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் அறிவுறுத்தினார்.