வரையாடு திட்டம் குறித்த வாகன விழிப்புணர்வு கலைப்பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நீலகிரி வரையாடு திட்டம் குறித்த வாகன விழிப்புணர்வு கலைப்பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2025-01-22 09:28 GMT
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியில் தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நீலகிரி வரையாடு திட்டம் குறித்த வாகன விழிப்புணர்வு கலைப்பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு வரையாடு பற்றிய விழிப்புணர்வுகளை பல்வேறு நிகழ்ச்சியின் மூலமாக தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பன்றி, மயில்கள், மான்கள் இவை எல்லாம் விவசாயத்திற்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருந்து சுமார் 60 கி.மீ. அருகில் இருக்கக்கூடிய வெம்பக்கோட்டை பகுதிகளில் மான்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. காப்புக்காடுகளில் இருக்கக்கூடிய காட்டுப்பன்றிகள் இன்றைக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கக்கூடிய நரிக்குடி பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. நம்முடைய இயற்கை சமநிலை சில பத்தாண்டுகளில் மாறி மாறி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். மயில்களின் உடைய இனப்பெருக்கத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய மயில்களினுடைய முட்டை நரிகளுக்கு உணவாக இருக்கிறது. மேலும், மான்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப புற்கள் கிடைக்காமல் தன்னுடைய உணவிற்கு காட்டை விட்டு வெளியில் செல்லும் நிலைமை ஏற்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து பார்த்தால் மிகப்பெரிய அழிவுகளை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். மேலும், புலிகளின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக மான்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. எனவே, இயற்கை சமநிலை என்பது ஒரு விலங்கு அந்த சூழ்நிலையிலும், சமநிலையோடும் இருப்பது மிக மிக அவசியம். இயற்கை தன்னுடைய சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்கிறது. இந்த இயற்கை தகவமைப்பை மனிதன் தன்னுடைய செயல்களின் காரணமாக அழிக்கின்ற போது தான் இந்த சமநிலை மாறுபடுகிறது. இயற்கை சமநிலையில் நீலகிரி வரையாட்டினை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்றால், நீலகிரி வரையாடு என்பது ஒரு காட்டிற்கு புலி எப்படி முக்கியமான விலங்காக இருப்பது போல, நீலகிரி வரையாடும் மிகவும் முக்கியமானது ஆகும். அதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அடுத்த தலைமுறை இந்த இயற்கை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு நீலகிரி வரையாடு பாதுகாப்பு திட்டம் குறித்து, தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறது. மாணவர்களாகிய நீங்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் சுற்றுச்சூழல் இல்லை என்றால் மனிதர்கள் இல்லை என்பதை உணர்ந்தவர்களாக, ஒரு உயர்ந்த முக்கியத்துவத்தை தெரிந்தவர்களாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவில்லை என்றால், நேரடியாக மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று புரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வோடு நீங்கள் அடுத்து வரக்கூடிய உங்கள் ஐம்பது ஆண்டுகாலம் இதுகுறித்து பேச வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொடர்ச்சியான சங்கிலியில் தொடர்ச்சியான அறிவு கடத்தலில் அரசு ஈடுபடுகிறது. அது குறித்து நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Similar News