தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பொறுப்புக் குழு நியமனம்

தமிழ் பல்கலைக்கழகம்

Update: 2025-01-22 09:53 GMT
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 5 பேர் கொண்ட துணைவேந்தர் பொறுப்புக் குழு திங்கள்கிழமை நியமனம் செய்யப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தில் 2017-18 ஆம் ஆண்டில் 40 பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில், பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர்களுக்கு தகுதி காண் பருவம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  இதையடுத்து, நில அறிவியல் துறைப் பேராசிரியர் க.சங்கர் பொறுப்புத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு, தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்வது தொடர்பாக ஆட்சிக் குழுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை (ஜன.20) நடைபெற்றது.  இதில், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் வே. ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை ந.அருள், ஆட்சிக் குழு உறுப்பினர்களான பேராசிரியர்கள் வீ.அரசு, பெ.பாரதஜோதி, சி.அமுதா ஆகியோர் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரிடமிருந்து ஒப்புதல் கிடைத்த பிறகே துணைவேந்தர் பொறுப்புக் குழுவின் செயல்பாடுகள் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

Similar News