கிராம சபைக் கூட்டங்களில் கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் : பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல் 

கோரிக்கை மனு

Update: 2025-01-22 11:45 GMT
கிராம சபைக் கூட்டங்களில் கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வருகிறது.  இதன்படி, செவ்வாய்க்கிழமையன்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரிடமும், "ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும். அதனை ஒரு விவாதப் பொருளாக தீர்மானத்தில் இணைக்க வேண்டும்" என வலியுறுத்தி  பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர்  தி.தனபால், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சொ.சரிதா, வட்டார ஒருங்கிணைப்பாளர் சிவ.ரவிச்சந்திரன் ஆகியோர் மனுவை வழங்கினர் . மேலும், தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்களை நேரில் சந்தித்து மனுவின் நகல் வழங்கப்பட்டு, கிராம சபை கூட்டத்தில் கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர்  தி.தனபால் கூறுகையில், "கடந்த காலங்கள் போல் இல்லாமல் இனிவரும் காலங்களில் அனைத்து கிராம சபைக் கூட்டங்களிலும், கல்வி சார்ந்த தேவைகளையும், பள்ளி சார்ந்த தேவைகளையும் முதன்மையான கூட்டப் பொருளாக முன்வைக்க வேண்டும். கிராம சபைக் கூட்டங்களில், கல்வி உரிமைச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கல்வி வளர்ச்சி குறித்து விவாதப் பொருளாக இடம் பெற வேண்டும். இது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாயக் கடமையாகும். இதுகுறித்து, அனைத்து ஒரு நபர், ஒரு பள்ளி செயல்பாட்டாளர்களும், கிராம ஊராட்சி செயலாளர்களை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்து வருகின்றனர்" என்றார்.

Similar News