கடல் அரிப்பு குறித்து தேசிய ஆராய்ச்சி மைய குழுவினர் ஆய்வு.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பு தொடர் கடல் அரிப்பு. கடல் அரிப்பு குறித்து தேசிய ஆராய்ச்சி மைய குழுவினர் நேரில் ஆய்வு.;
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் தொடர்ந்து கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுமார் 50 அடிக்கு 8 அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் படிக்கட்டுகள் பகுதியில் தகரம் மற்றும் தடுப்புவேலிகள் கொண்டு பக்தர்கள் இறங்காதவாறு அடைக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பாறைகள் மற்றும் பெரிய அளவிலான கற்கள் வெளியே தெரிகின்றன. இதனால் கடலில் நீராடும் பக்தர்களுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் கடற்கரையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையில் நேற்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இருந்து அமலிநகர் வரை கடல் அரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்றைய தினம் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் திருச்செந்தூர் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் கடற்கரையில் இதுவரையில் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பு இருந்து அமலிநகர் கடற்கரை வரையில் கடற்கரையோரம் நடந்து சென்று கடலை ஆய்வு செய்தனர். தொடர்ந்து நாளைய தினம் கடல் பகுதியை ட்ரோன் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் மூலம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை புவி அறிவியல் அமைச்சகத்திடம் வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து கடற்கரையில் கடல் அரிப்பை தடுப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து ராமநாதன் கூறுகையில், தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் சார்பில் கடந்த இரண்டு தினங்களாக திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் எங்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 33 சதவீதம் பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து இடமும் உள்ளது போல் தான் திருச்செந்தூர் கடற்கரையிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றத்தின் காரணமாகவும் இதுபோல் கடல் அரிப்பு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் கால நிலை மாற்றத்தின் காரணமாகவும் இதுபோல் கடல் அரிப்பு ஏற்படும். நாளைய தினம் கடல் பகுதியை ட்ரோன் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.