சங்கரன்கோவிலில் கொடுக்கல் வாங்கல் பணத்தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து
கொடுக்கல் வாங்கல் பணத்தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து;

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சீவலராயனேந்தல் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் சங்கரன்கோவில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு அவர் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். சில மாதங்களாக வட்டி பணம் கொடுக்காத காரணத்தால், மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் ராமசாமியின் வீட்டிற்கு நேரடியாக சென்று பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனை தொடர்ந்து மஹேந்திரனின் ஆதரவாளர்கள் ராமசாமியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, தனது தந்தையை தாக்கிய காரணத்தால் ஆத்திரமடைந்த ராமசாமியின் மகன் சரவணன் என்பவர் இன்று இரவு சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் நின்று கொண்டிருந்த மஹேந்திரனை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயமடைந்த மஹேந்திரன், சிகிச்சைக்காக சந்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.