ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பேட்டி

ஆளுநரின் தேநீர் விருந்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாது காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை;

Update: 2025-01-24 10:01 GMT
ராமநாதபுரம்ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தன்று நடைபெறும் தேநீர் விருந்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாது என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தலைமையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. குழு உறுப்பினர்களான எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எழிலரசன், சந்திரன், முகம்மது ஷா நவாஸ், சேகர், சட்டப்பேரவை இணைச் செயலாளர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வரவேற்றார். கூட்டத்தில் செல்வப் பெருந்தகை பேசும்போது: பின்தங்கிய நிலையில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம், நான்கு ஆண்டு ஆட்சியில் வளர்ச்சி மாவட்டமாக எழுச்சியுடன் வளர்ந்து வருகிறது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு 32 சதவீதம் நிதி வழங்குகிறது. மீதி 68 சதவீதம் நிதியை தமிழக அரசு வழங்குகிறது. ஆனால் அந்த திட்டத்தில் தமிழக அரசின் பெயர் இடம் பெறாமல், மத்திய அரசின் பெயர் மட்டுமே இடம் பெற்று வந்தது. ஆனால் ஆய்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக தமிழக அரசு பெயர் இடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனுஷ்கோடி அரிசல்முனைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் சுகாதார வளாகம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. அங்கு மொபைல் போன் தொடர்பு வசதிகூட கிடையாது. அதனால் அங்கு மொபைல் டவர் அமைக்கவும், கழிப்பறை வசதி, ஹெல்ப் டெக்ஸ் மற்றும் ஹெல்த் டெஸ்க் அமைக்க பொதுக்கணக்கு குழு பரிந்துரைத்துள்ளது. சுற்றுலாத்துறையும், பொதுப்பணித்துறையும் சேர்ந்து ஒரு திட்ட அறிக்கை கொடுத்தால் அங்கு சுற்றுலாத்தலம் அமைக்க, நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். அதேபோல் இப்பகுதியில் கடல் ஆமைகளை பாதுகாக்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருவது பாராட்டிற்குரியது. லட்சக்கணக்கான மக்கள் பல மாநிலங்கள், உலக நாடுகளில் இருந்து வந்து செல்கின்றனர். அதனால் கழிவுகள் கடலில் விட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. அதற்கு ஒரு தனி திட்டம் தீட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க பரிந்துரை செய்துள்ளோம். ராமேசுவரத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கவும், புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழிலாளர், மருத்துவம், உள்ளாட்சி, பள்ளிக் கல்வி ஆகிய துறைகளில் சிஏஜி அறிக்கையில் சில தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் அந்தந்த துறைச்செயலாளர்களை அழைத்து அதற்கு தீர்வு காணப்படும். மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 174 வீடுகளை செப்பனிட அரசு ஆணையிட்டுள்ளது. கூடுதல் வீடுகள் கட்டவும், குழந்தைகள் படிக்கவும், அவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கவும், அவர்கள் நாட்டுக்கு செல்ல நமது அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். அரசிலமைப்புச் சட்டப்படி நடக்கவில்லை. அவர் தமிழகத்தின் கலாச்சாரம், இலக்கியம், பண்பாடு போன்றவற்றிற்கு எதிராக செயல்படுகிறார். தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும், முதல்வருக்கு எதிராகவும் செயல்படுகிறார். மாநிலத்திற்கு எதிராக செயல்படும் அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அவரின் செயல்பாட்டை கண்டித்து வரும் குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடக்கின்ற தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியின் சார்பாக புறக்கணிக்கிறோம். மானம், ஈனம், ரோசம் உள்ளவர்கள் அந்தத் தேநீர் விருந்துல் கலந்து கொள்வார்களா?. அச்சு ஊடகவியலாளர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதுபோல், காட்சி ஊடகவியலாளர்களுக்கும் அனைத்து அரசின் சலுகைகளும் அளிக்க வேண்டும் என பொதுக்கணக்கு குழு பரிந்துரைக்கும். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசுகிறேன் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், கரு.மாணிக்கம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News