போலீஸ் குழு அமைப்பு
ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்க போலீஸ் அதிவிரைவு குழு அமைப்பு;
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி 5ம் தேதி(புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க போலீசார் அதிவிரைவு நடவடிக்கை குழு(க்யூ.ஆர்.டி) அமைக்கப்பட உள்ளது.இதுகுறித்து மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-ஈரோடு இடைத்தேர்தல் நடக்கும் 237 வாக்குச்சாவடிகளிலும் ஒரு துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பதற்றமான வாக்குச்சாவடியில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட உள்ளது. வாக்குச்சாவடி எல்லையான 100 மீட்டரில் ஒரு சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசாரும், 200 மீட்டர் தூரத்தில் ஒரு சப்- இன்ஸ்பெக்டர் தலைமையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதுதவிர தேர்தலன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்க அதிவிரைவு நடவடிக்கை குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவினர் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அங்கு உடனடியாக விரைந்து சென்று, பிரச்சனைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், ஏ.டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான அதிவிரைவுப்படை போலீசாரும், டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய போலீசார் குழுவினரும் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன ரோந்து பணியில் ஈடுபடுவர். தற்போது, வாக்குச்சாவடியில் பணியாற்ற போலீசார், அதிவிரைவு நடவடிக்கை குழு போலீசார் ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.