பூத் சிலிப் விநியோகம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை 1.44 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம்;
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேர்தலில் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வீடு வீடாக சென்று பூத்சிலிப் வழங்கும் பணி கடந்த 26-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26 ஆம் தேதி அன்று 40 ஆயிரத்து 429 வாக்காளர்களுக்கும், 27-ம் தேதி அன்று 34 ஆயிரத்து 859 வாக்காளர்களுக்கும், 28ஆம் தேதி 32 ஆயிரத்து 79 வாக்காளர்களுக்கும், நேற்று 37 ஆயிரத்து 146 வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 1 லட்சத்து 44 ஆயிரத்து 513 வாக்காளர்களுக்கு பூத்சிலிப் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 83 ஆயிரத்து 33 வாக்காளர்களுக்கு இன்றும், நாளையும் பூத் சிலிப் வழங்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.