அமைச்சர் உறுதி

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வசதி மேம்படுத்தி தருவதாக அமைச்சர் உறுதி;

Update: 2025-01-31 04:16 GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் பிரசாரம் மேற்கொண்டனர். வீடுவீடாக சென்று ஓட்டு சேகரித்த இடங்களில், ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்பு வழங்கினர். அப்பகுதி மக்கள் தெரிவித்த கோரிக்கைகளை பதிவு செய்து கொண்ட அமைச்சர் சு.முத்துசாமி, தேர்தல் முடிந்த பின், நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். பின், அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது: கருங்கல்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கத்துடன், இப்பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின் இணைப்புடன் போதிய மின் விளக்குகள், பொது கழிப்பிடம் போன்றவை ஏற்படுத்தி தரப்படும். இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் தேவையான அடிப்படை கட்டமைப்பு, கூடுதல் கட்டடம் ஏற்படுத்தி தரப்படும். ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சாலைகள் விரிவாக்கத்துடன், ரயில்வே நுழைவு பாலங்களுக்கு மாற்றாக கொல்லம்பாளையம், ரங்கம்பாளையம், கரூர் சாலையில் உள்ள நுழைவு பாலங்களுக்கு மாற்றாக உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர முயற்சிகள் நடந்து வருகிறது. அவை விரைவுபடுத்தப்படும். ஈரோட்டில் உள்ள விசைத்தறியாளர்கள் வேண்டுகோளின்படி, இலவச மின்சாரத்துக்கான யூனிட் உயர்த்தப்பட்டுள்ளது. இலவச வேட்டி, சேலை, இலவச பள்ளி சீருடை போன்றவைகள், அவர்களது வேண்டுகோளின்படி விசைத்தறிகளில் இயக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், விசைத்தறியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கும், என்றார். ஈரோடு எம்.பி., கே.இ.பிரகாஷ், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், நிர்வாகிகள் செந்தில்குமார், திருவாசகம், சிவகுமார், ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். –––––––––––––

Similar News