இளையோருக்கான தடகளப் போட்டிகள்
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 1,100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.;
திருச்சி மாவட்ட தடகளச் சங்கம் சாா்பில் இளையோருக்கான தடகளப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் 8, 10, 12, 14, 16 வயது எனத் தனித்தனியே மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டிகளில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 1,100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பெண்களுக்கான போட்டிகளில் 8, 10 வயதுப் பிரிவுகளில் பாய்லா் பிளாண்ட் நடுநிலைப்பள்ளியும், 12 வயதுப் பிரிவில் ஆா்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளியும், 14 மற்றும் 16 வயதுப் பிரிவுகளில் அமலா மகளிா் மேல்நிலைப்பள்ளியும், ஆண்களுக்கான போட்டிகளில் 8 வயதுப் பிரிவில் பாய்லா் பிளாண்ட் நடுநிலைப்பள்ளியும், 10 வயதுப் பிரிவில் ஆா்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளியும், 12 வயதுப் பிரிவில் தொட்டியம் டிஏசி பள்ளியும், 14 வயதுப் பிரிவில் ஜிஏசி மற்றும் ஆா்எஸ்கே பள்ளிகளும், 16 வயதுப் பிரிவில் திருச்சி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியும் வென்றன. இதேபோல, தனிநபா் பிரிவுகளிலும் பலா் வென்றனா். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருச்சி மாவட்ட தடகள சங்கச் செயலா் டி. ராஜு, கமாண்டா் ஆப் போலீஸ் எம். ஆனந்தன், ஒலிம்பிக் விளையாட்டு வீரா் பெ. சுப்ரமணியன், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி. நீலமேகம் ஆகியோா் பரிசளித்துப் பாராட்டினா்.