தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகின்ற 13.02.2026 அன்று டாக்டர் ப.சுப்பராயன் முன்னாள் முதலமைச்சர் மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கத்தினை திறந்து வைக்கவுள்ளார் எம்.பி கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தகவல்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன் அவர்களின் மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கத்தின் திறப்பு விழாவினை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 13.02.2026 அன்று சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், நவனி தோட்டக்கூர்பட்டி கிராம ஊராட்சியில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன் அவர்கள் நினைவாக ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கத்தினை திறந்து வைக்கவுள்ளார்கள்.;

Update: 2026-02-07 11:52 GMT

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் (07.02.2026) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர்  கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்  நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், நவனி கிராமத்தில் ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன் அவர்களின் மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்  புதுச்சத்திரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில்,நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய ப.சுப்பராயன் அவர்கள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகில் உள்ள குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவராவார். பூர்வீகமாக அவரின் முன்னோர்கள் வாழ்ந்த பகுதி புதுச்சத்திரம் ஒன்றியத்தை ஒட்டியுள்ள பகுதிகளாகும். நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த அவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் வரை உயர்ந்தவர். அவர் ஒன்றிய அமைச்சராகவும், மகாராஷ்ரா மாநிலத்தின் ஆளுநராகவும் பல்வேறு நிலைகளில் நம் நாட்டிற்காக பாடுபட்டவர். இந்திய தேசிய காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்திலும், தனது பங்களிப்பை அளித்தவர். நம்நினைவில் வாழும் ஐய்யா சுப்பராயன் அவர்களின் நினைவை போற்றிடும் வகையில், அவருடைய சொந்த மாவட்டம், அவர்கள் பூர்வீகமாக இருந்த பகுதியில் அவருக்கு ஒரு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இப்பகுதி மக்களிடையேயும், அவரை சார்ந்த உறவினர்கள், அவர் வாழ்ந்த பகுதி மக்களிடமும் இருந்து வந்தது.2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் நாமக்கல் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு, மறைந்த நம்முடைய முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன் அவர்களுக்கு ஒரு மண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆட்சி அமைந்தவுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் ஆகியோரிடம் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மற்றும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருடன் சென்று, தேர்தல் அறிக்கையின்படி, டாக்டர் ப.சுப்பராயன் அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பொதுமக்கள் அனைவரும் எளிதாக மண்டபத்தை பார்வையிடுகின்ற வகையில் அரங்கம் அமைத்திட வேண்டி கோரிக்கை வைத்தோம். தமிழ்நாடு முதலமைச்சர்  அதனை ஏற்று ரூ.3.06 கோடி மதிப்பில் டாக்டர் ப.சுப்பராயன் அவர்களுக்கு அரங்கம் அமைத்திட ஆணை வழங்கி, அரங்கம் மட்டுமல்லாமல், அவரின் மார்பளவு சிலையும் நிறுவிட ஆணையிட்டு நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அதனடிப்படையில் கடந்த 2 ஆண்டுகாலமாக அரங்கம் கட்டும் பணி நடைபெற்று, ஏறத்தாழ 99 சதவீதம் பணிகள் பூர்வாங்கமாக அனைத்தும் முடிவடைந்து, திறப்பு விழாவிற்கு தயார்நிலையில் உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 13.02.2026 அன்று சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக மறைந்த நமது சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன் அவர்களின் மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கத்தினை திறந்து வைக்கவுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. மறைந்த நமது சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன் அவர்களின் முழுபெயர் பரமசிவ சுப்பராயன் ஆகும். இவர் வாழ்ந்த காலம் என்பது 1889 முதல் 1962 வரை வாழ்ந்தார்.தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், மாநிலங்கவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மகாராட்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார். காலம் சென்ற இவரின் மகன்கள் மோகன் குமாரமங்கலம் அவரும் முன்னாள் அமைச்சராக இருந்தவர். அவர்வழி வந்த அவரின் பேரன்கள் ரங்கராஜன் குமாரமங்கலம் அவர்களும் ஒன்றிய அரசில் அமைச்சராக இருந்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் அவர் வாழ்ந்த பகுதியை சேர்ந்த மக்களும் பங்கேற்க உள்ளார்கள். மேலும் அவரின் குடும்பத்தினர் கௌரவிக்கப்படவுள்ளார்கள் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர்  கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்   தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.சரவணன், உதவி செயற்பொறியாளர் திரு.கார்த்திகேயன் உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Similar News