சேலத்தில் எலுமிச்சை பழம் விலை உயர்ந்துள்ளது.

30 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு ரூ.1,300 வரை அதிகரித்துள்ளது.;

Update: 2025-02-21 04:13 GMT
சேலம் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலால் பல்வேறு இடங்களில் இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய், தர்பூசணி உள்ளிட்ட கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் வியாபாரமும் சூடுபிடித்து வருகிறது. அதே நேரம் முலாம்பழம், கரும்பு, எலுமிச்சை ஜூஸ்களும் அதிகளவில் பொதுமக்கள் குடித்து வெப்பத்தை தணித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை ஆந்திராவில் இருந்து அதிகளவில் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சேலம் கடைவீதி, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக எலுமிச்சை பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை பழம் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக 30 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை எலுமிச்சை பழம் கடந்த வாரம் ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை விற்பனையானது. ஆனால் நேற்று ஒரு மூட்டை ரூ.2,200 முதல் ரூ.2,500 வரை விலை உயர்ந்துள்ளது. அதாவது மூட்டைக்கு ரூ.1,300 வரை அதிகரித்துள்ளது. இதில் நாட்டு எலுமிச்சை பழம் 35 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை கடந்த வாரம் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த பழம் நேற்று மூட்டைக்கு ரூ.1,200 வரை அதிகரித்து ரூ.3,200 வரை விற்பனையானது. இதன் காரணமாக சில்லறை விற்பனையிலும் எலுமிச்சையின் விலை உயர்ந்துவிட்டது. வியாபாரிகள் எலுமிச்சை பழத்தை ரகம் வாரியாக பிரித்து ரூ.5 முதல் ரூ.8 வரை விற்பனை செய்து வருகிறார்கள். இனிவரும் நாட்களில் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News