ஒன்றிய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே திராவிடர் கழகத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இந்தியை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி வளர்ச்சி நிதியைத் தரமுடியும் எனக் கூறும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், இந்தி திணிப்பைக் கண்டித்தும் முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமை வகித்தார். தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, திமுக மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், மதிமுக தெற்கு மாவட்டச் செயலர் வி.தமிழ்ச்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநகர மாவட்டச் செயலர் அண்ணாதுரை, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், இளைஞரணி மாநிலத் துணைச் செயலர் இரா.வெற்றிகுமார், மாணவரணி செயலர் செந்தூரபாண்டியன், மாவட்டக் காப்பாளர் அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.