உடையார்பாளையம் வக்கீல் கொலை வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை அரியலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உடையார்பாளையம் வக்கீல் கொலை வழக்கில் தாய், தந்தை மகன்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.;

Update: 2025-02-25 18:19 GMT
அரியலூர், பிப்.25- அரியலூர் மாவட்ட உடைய பாளையத்தில், தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞரை கொலை செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மகன்கள் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அறிவழகன். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு‌ நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே அறிவழகனுக்கும் அவரது உறவினர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பலமுறை அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. வழக்கறிஞரான இவரை கடந்த 21.02.2022 அன்று, முன்விரோதம் காரணமாக சுப்ரமணியன், அவரது மனைவி நீலாம்பாள், மகன்கள் செந்தில்குமார், செல்வம், மணிகண்டன் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து வெட்டி படுகொலை செய்துள்ளனர். அன்புச்செல்வன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 21.02.2022 அன்று உடையார்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த உடையார்பாளையம் காவல்துறையினர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை சுப்பிரமணியன், தாய் நீலாம்பாள், மகன்கள் செந்தில்குமார் செல்வம், மணிகண்டன், ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து சாட்சிகளும் மற்றும் விசாரணை ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி கட்ட விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குற்றவாளிகளான சுப்பிரமணியன், செந்தில்குமார், செல்வம், மணிகண்டன், நீலாம்பாள் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மலர் வாளண்டினா தீர்ப்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினரால் அடைக்கப்பட்டனர்.

Similar News