குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (65). இவர் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கினார். அதில் அவருக்கு ஏராளமான காயம் ஏற்பட்டது. பல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் காயங்கள் குணமாகவில்லை. இதனால் வலியால் துடித்து அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் ராமகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்னே உள்ள செட்டில் தூக்கு போட்டு ஆபத்தான நிலையில் காணப்பட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே ராமகிருஷ்ணன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். இது குறித்து அவரது மகன் வைகுண்டன் என்பவர் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.