போலீசார் தீவரம்
ரூ. 2 கோடி பணம் கேட்டு கடத்தப்பட்ட பெங்களூரு சட்டக் கல்லூரி மாணவர் பவானிசாகர் அருகே கள்ளிப்பட்டி சோதனை சாவடியில் மாணவரை மீட்ட போலீசார் தப்பி ஓடியவர்களை பிடிக்க தீவிரம்;
கர்நாடகா மாநிலம் பெங்களூரு, ஹெபால், ஆர்.டி.நகர், சோழ நாயகன ஹல்லி, கெம்பன்னா லேஅவுட், 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்து. தொழிலதிபர். இவரது மகன் இஸ்ரவேல் (21). இவர் பெங்களூரு, பன்சங்கரில் உள்ள பி.இ.எல். சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இஸ்ரவேல் பெங்களூரு, எல்லங்கா வீரசாகரில் உள்ள பாண்டே மாறம்மாள் கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு இனோவா கார் இஸ்ரவேல் பக்கம் வந்து நின்றது. காரில் 4 பேர் இருந்தனர். அவர்கள் இஸ்ரவேலிடம் நாங்கள் உங்கள் வீட்டை வாடகைக்கு பார்க்க வந்துள்ளோம். அதற்கு முன் பணம் கொடுக்க அருகில் உள்ள ஏ.டி.எம்.மையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி இஸ்ரவேலை தங்களது காரில் ஏற்றி கொண்டு சென்றனர்.அவர்கள் ஏ.டி.எம். மையம் செல்லாமல் காரை வேறு வழியாக அழைத்து சென்றபோது, இஸ்ரவேல் அவர்களிடம் எங்கே போகிறீர்கள் என கேட்டு உள்ளார். அப்போது காரில் இருந்த 2 நபர்கள் இஸ்ரவேலின் வாயை பொத்தி நீ முத்துவின் மகன் தானே. உன்னை கடத்தி செல்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் அந்தக் கார் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த பெரிய கள்ளிப்பட்டி சோதனை சாவடி அருகே இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு வந்தது. சோதனை சாவடியில் பவானிசாகர் போலீஸ் அரிஷ்குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது காரில் இருந்த இஸ்ரவேல் போலீசை பார்த்து தன்னை காப்பாற்றுமாறு கத்தியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் அரிஷ்குமார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் நால்வரும் இந்தப் பையன் பைத்தியம் என்று கூறிக்கொண்டே காரை எடுத்துள்ளனர். ஆனால் சந்தேகம் அடைந்த போலீஸ் அரிஷ் குமார் இஸ்ரவேல் கையைப் பிடித்து வெளியே இழுத்தார். இதில் இஸ்ரவேல் காரை விட்டு வெளியே வந்தார். உடனடியாக காரில் இருந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இஸ்ரவேலை விசாரணைக்காக பவானிசாகர் போலீஸ் நிலையத்திற்கு அனைத்து சென்றனர். அப்போது போலீசாரிடம் இஸ்ரவேல் கூறும் போது, காரில் 4 நபர்கள் இருந்தனர். நாலு பேர் மலையாள மொழியில் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் என்னை பார்த்து நீ எங்களுக்கு லட்டு மாதிரி கிடைத்து விட்டாய். உன்னை வைத்து தான் உன் அப்பா முத்துவிடம் ரூ.2 கோடி பணம் கேட்க வேண்டும் என்று கூறியதாக கூறினார். இதனை அடுத்து பவானிசாகர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்ரவேல் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரது பெற்றோர் பவானிசாகர் போலீஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வந்த பிறகுதான் கடத்தலுக்கு உண்மையான காரணம் தெரிய வரும். இந்நிலையில் காரில் தப்பி சென்ற கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூருரில் இருந்து கடத்தி வரப்பட்ட சட்டக் கல்லூரி மாணவரை போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.