நாய்களுக்கு கருத்தடை

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டில் 6,600 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை;

Update: 2025-03-03 03:23 GMT
ஈரோடு மாநகர் மற்றும் கிராம பகுதியில் தெரு நாய்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. அவற்றை முறையாக கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆடு, மாடு, கோழி மற்றும் மனிதர்களை கடித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து ஈரோடு கால்நடை துணை, இணை இயக்குனர் அலுவலக அலுவலர்கள் கூறியதாவது:-அனிமல் வெல்பேர் போர்டு விதிப்படியே நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு முறையான அறுவை சிகிச்சை கூடம், அரசு அனுமதி பெற்று செயல்பட வேண்டும். மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் இயங்குகிறது.பயிற்சி பெற்றவர்கள் மூலமே நாய்களை பிடிக்க வேண்டும். அவற்றைக் கொன்று விடக்கூடாது. பிடிபட்ட நாய்க்கு முறையாக உணவு வழங்கி 5 நாட்களுக்கு ஆரோக்கியம் பேணி கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டும். அதன் பின் மீண்டும் 5 நாட்கள் பராமரித்து எங்கு பிடிக்கப்பட்டதோ அதே இடத்தில் திரும்ப விட வேண்டும். இதுபோன்ற வசதி பஞ்சாயத்து நகராட்சி, டவுன் பஞ்சாயத்துகளில் ஏற்படுத்த இயலாது. நாய்களைப் பிடிக்க விருப்பம் உள்ளவர்கள் அதற்கான அமைப்பை ஏற்படுத்த மாவட்ட அளவிலான கமிட்டியிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். ஈரோடு மாநகராட்சி பகுதியில் 2024 ஜனவரி முதல் தற்போது வரை 6,600 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News