கோவில் விழா
அந்தியூர் அருகே கோவில் விழாவில் ஆயிரம் கிடாக்கள் பலியிட்டு பக்தர்களுக்கு அன்னதானம்;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா அம்மன் உத்தரவு கிடைத்தால் மட்டுமே நடக்கும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு விழா நடந்தது. கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் காரணமாக விழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டுக்கான விழா நடத்த அம்மனிடம் பூ போட்டு உத்தரவு கேட்கப்பட்டது. இதில் உத்தரவு கிடைக்கவே 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் வேட்டை (வேண்டுதல் கிடா வழங்கும் நிகழ்ச்சி) நடந்தது. அங்காளம்மன், நடராஜர் மற்றும் பச்சாயி அம்மன் உற்சவர் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து பக்தர்கள் தோளில் சுமந்து மடப்பள்ளியில் இருந்து ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு சென்றனர். அங்கே சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டு, பக்தர்கள் வழங்கிய கிடாக்கள் அம்மனுக்கு பலி கொடுக்கப்பட்டது. இந்த வகையில் ஆயிரம் கிடாக்கள் பலி கொடுக்கப்பட்டன. இவற்றை கோவில் வளாகத்திலேயே சமைத்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஒருபுறம் 5000 கிலோ ஆட்டுக்கறியும், மறுப்புறம் சாதமும் மலைபோல் குவிக்கப்பட்டு அன்னதானம் நடந்தது. விழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.