ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது. ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களான பெரிய மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் கம்பம் நடும் விழா, பூ மிதித்தல், தேரோட்டம் நடப்பது வழக்கம்.இந்தாண்டு விழா வரும் 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 22ம் தேதி பட்டாளம்மன் சிறப்பு அபிஷேகமும், கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 26ம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், 27ம் தேதி கொடியேற்றமும் நடக்கிறது.ஏப்.1ம் தேதி வாய்க்கால் மாரியம்மன் கோயிலில் குண்டம் பூ இறங்குதல், மாவிளக்கு, கரகம் நடக்கிறது. 2ம் தேதி, சின்ன மாரியம்மன் கோயிலில் இருந்து தேர் வடம் பிடித்தல், 3ம் தேதி, மலர் பல்லக்கில் பெரிய மாரியம்மன் வீதி உலா நடக்கிறது. 4ம் தேதி காரைவாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. 5ம் தேதி மஞ்சள் நீர், கம்பம் எடுத்தலும், 6ம் தேதி மறுபூஜையும் நடக்கிறது. இந்த குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 6.30 மணிக்கு, ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், உதவி ஆணையர் சுகுமார், செயல் அலுவலர் அஞ்சுகம் மற்றும் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துவருகிறது