தேர்வு மையத்தில் பரபரப்பு

ஈரோட்டில் இன்று காலை பரபரப்பு தவறுதலாக மாற்று தேர்வு மையத்திற்கு வந்த தனித்தேர்வு எழுதும் மாணவிகள் காரில் அழைத்து சென்று உதவிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்;

Update: 2025-03-04 05:20 GMT
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் - 2 பொதுத்தேர்வு தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் - 2 பொதுத்தேர்வை 108 தேர்வு மையங்களில் 23 ஆயிரத்து 71 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 1, 267 என மொத்தம் 24,338 மாணவ மாணவிகள் பிளஸ் - 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை 10:15 மணிக்கு பிளஸ் - 2 பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வை மாணவ மாணவிகள் எழுதினர்.இந்நிலையில் தேர்வை பார்வையிடுவதற்காக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு வந்திருந்தார். அப்போது தனி தேர்வு எழுதும் மூன்று மாணவிகள் அந்த தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர். ஆனால் இந்த மாணவிகள் பதற்றத்தில் ஹால் டிக்கெட்டை எடுத்து வர மறந்து விட்டனர். மேலும் அவர்கள் தேர்வு மையம் தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்ததும் தெரிய வந்தது. அவர்கள் தவறுதலாக பன்னீர்செல்வம் பார்கில் உள்ள அரசு பெண்கள் தேர்வு மையத்திற்கு வந்ததும் தெரிய வந்தது. இதனால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர். இதைப் பற்றி கேள்விப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பராவ் அந்த மாணவிகளிடம் பேசி பதற்றப்பட வேண்டாம். இங்கே உங்களுக்கு ஹால் டிக்கெட் எடுத்து தருகிறேன் என்று கூறி பள்ளி அலுவலகத்தில் உள்ள கணினி மூலம் அந்த மூன்று மாணவிகளுக்கும் பிளஸ் - 2 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து எடுத்து அவர்களிடம் வழங்கினார். மேலும் தனது கார் மூலமாக அந்த மூன்று மாணவிகளையும் தேர்வு மையமான தில்லை நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்துச் சென்று தீர்வு எழுத உதவினார். அந்த மூன்று மாணவிகளும் சுப்பராவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Similar News