தாலிக்கொடி பறிப்பு
பெருந்துறை அருகே துணிகரம் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை;
ஈரோடு, குமரன் குட்டை, செல்லப்பகவுண்டர், தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சித்ரா (43). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ராஜேந்திரன் ஈரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று காஞ்சி கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக சித்ரா தனது கணவர் ராஜேந்திரன் உடன் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அவர்களுக்குப் பின்னால் ராஜேந்திரனின் அண்ணன் மற்றும் அவரது மனைவி மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். சித்ரா சென்ற மோட்டார் சைக்கிள் பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் இரண்டு நபர்கள் அவர்களை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். காஞ்சிகோவில் ரோடு, இளைமேடு, தீதம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிள் வந்த நபரில் ஒருவர் திடீரென சித்ரா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி கொடியை பறித்தார். திடீரென தாலியை பிடித்து இழுத்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து சித்ரா தவறி கீழே விழுந்தார். அந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கீழே விழுந்ததில் சித்ராவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சித்ரா தனது கணவருடன் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கணவருடன் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.