மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய மின்வாரிய பெண் ஊழியருக்கு சிறை 

கிரைம்;

Update: 2025-03-04 16:37 GMT
தஞ்சையில் மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.4500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய பெண் ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. தஞ்சை விளார் சாலை நாவலர் நகரை சேர்ந்தவர் மனோகரன்(42). இவரது மனைவி சரஸ்வதி. இவரது அக்கா பத்மினி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 4- ஆம் தேதி நாஞ்சிக்கோட்டை சாலை ஈ.பி.காலனி மேற்கு பகுதி வசந்தபுரி நகரில் புஷ்ப வள்ளி என்பவரிடம் இருந்து ஒரு வீட்டை  வாங்கி வசித்து வருகிறார். 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ஆம் தேதி பத்மினி வாங்கிய வீட்டின் மின் இணைப்பின் பெயரை மாற்றம் செய்வதற்காக மனோகரன் நாஞ்சிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த தஞ்சை மானோங்கோரை பகுதியை சேர்ந்த மின்கணக்கீட்டாளர் தேன்மொழியிடம்(53) மின் இணைப்பு மாற்றம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் வீட்டின் ஆவணங்களுடன் ரூ.4 ஆயிரத்து 500 பணம் கொடுக்கும் படி கேட்டுள்ளார். ஏன் என்று கேட்டதற்கு தேன்மொழி ஒவ்வொரு மின் இணைப்பிற்கும் ரூ.1,500 வீதம் ரூ.4 ஆயிரத்து 500 கொடுத்தால் உடனே மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்து விடலாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் சந்தேகம் தீராத மனோகரன் ஆன்லைனில் பெயர் மாற்றத்திற்கு எவ்வளவு கட்டணம் என்று பார்த்துள்ளார். அதில் ஒவ்வொரு இணைப்பின் பெயர் மாற்றத்திற்கு ரூ.150 என்று குறிப்பிட்டு இருந்துள்ளது. அதன்பின்னர் 11-ஆம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதற்கான ரசீதின் நகல் மற்றும் வீட்டிற்கான ஆவணங்களுடன் மீண்டும் நாஞ்சிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது மனோகரன் கொடுத்த அனைத்து ஆவணங்களையும் பார்வையிட்ட தேன்மொழி ரூ.4 ஆயிரத்து 500 கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.  உடனே மனோகரன் என்னிடம் பணம் இல்லை என்றும் ஏ.டி.எம்.ல் எடுத்து நாளை தருவதாக தெரிவித்துள்ளார். உடனே தேன் மொழி அனைத்து ஆவணங்களையும் உதவி பொறியாளர் அறையில் கொடுத்து விட்டு  செல்லுமாறும், ரூ.4 ஆயிரத்து 500 கொடுத்தால் தான் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவினர் அறிவுரையின் படி ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்து 500 க்கான நோட்டுகளை தேன்மொழியிடம், மனோகரன் கொடுத்தார். அதை தேன்மொழி பெற்ற போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினர்  அவரை கைதுசெய்தனர். இதுகுறித்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து நீதிபதி சண்முகபிரியா தீர்ப்பளித்தார். அதில், தேன்மொழிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கை தஞ்சை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் அன்பரசன் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் பத்மாவதி, சரவணன்,  ஆகியோர் சிறப்பாக நடத்தினர். இந்த வழக்கிற்கு அரசு வழக்குரைஞர் முகம்மது இஸ்மாயில் ஆஜரானார்.

Similar News