கள்ளப்பெரம்பூர் அருகே மணல் கடத்திய மூவர் கைது, இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
கிரைம் செய்திகள்;
தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் அருகே வெண்ணலோடை வெண்ணாற்றங்கரை பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தி வந்த 3 பேரை கைது செய்த காவல்துறையினர், தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப் பெரம்பூர் காவல் ஆய்வாளர் ராஜ்கமல் மற்றும் காவல்துறையினர் வெண்ணாற்று கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு மினிலாரியை மறித்தனர். காவலர்களை கண்டதும் மினி லாரியில் வந்த 2 பேர் திடீரென தப்பி ஓடினர். பின்னர் மினிலாரியில் இருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து மினி லாரியை சோதனை செய்தனர். இதில் எவ்வித அரசு அனுமதியும் இன்றி ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கள்ளப்பெரம்பூர் காவல்நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் தஞ்சாவூர் கூடலூர் பெரிய தெரு பகுதியை சேர்ந்த ராஜப்பா என்பவரின் மகன் எபினேசர் (30), கீழத்தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (20 ), இளங்கோவன் மகன் கிருபாகரன் (24) என்பது தெரியவந்தது. இதை எடுத்து கள்ளப்பெரம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர் மேலும் மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய கூடலூர் பெரிய தெரு ரவிநாத் மகன் அஜித்குமார், வெண்ணலோடை தினேஷ் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.