ஊருக்குள் வந்த யானை

தாளவாடி அருகே அகழியைத் தாண்டி ஊருக்குள் சென்று பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானை;

Update: 2025-03-05 09:26 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதும், வாகனங்களை வழிமறித்து உணவு உள்ளதா என பார்ப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி அடுத்துள்ள அருள்வாடி கிராமத்தில் அப்பகுதி மக்கள் யானைகள் ஊருக்குள் வராத வகையில் ஊரின் எல்லைப் பகுதியில் பத்தடி அகலத்தில் அகழி தோன்றி வைத்திருந்து விவசாயம் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று அருள்வாடி கிராம எல்லைப் பகுதிக்கு வந்தது. அங்கு தோண்டி வைக்கப்பட்டு இருந்த அகழியை லாபகரமாக தாண்டி ஊருக்குள் புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்தியது. யானை புத்திசாலித்தனமாக அகழியை தாண்டி ஊருக்குள் சென்ற காட்சியை அங்கு காவல் பணியில் இருந்த விவசாய ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து தாளவாடி கிராம மக்கள் கூறும்போது,யானை அகழி தாண்டி செல்வதை பார்க்கும் எங்களுக்கு பயமாக உள்ளது. அகழிகளை வனப்பகுதி ஒட்டி உள்ள அனைத்து இடங்களிலும் ஆழமாகவும், அகலமாகவும் யானைகள் தாண்டி செல்லாத வகையில் அமைக்க வேண்டும். மேலும் அருகே உள்ள கர்நாடக மாநிலத்தில் பழைய இரும்பு ரயில் தண்டவாளங்களைக் கொண்டு வேலிகள் அமைத்துள்ளனர். அதேபோல் இங்கும் யானைகள் வனப் பகுதி விட்டு வெளியே வராமல் சுற்றி அனைத்து இடங்களிலும் பழைய இரும்பு ரயில் தண்டவாளங்கள் அமைக்க வேண்டும் என்றனர்.

Similar News