போலீஸ்காரர் தற்கொலை
ஈரோடு ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை பணி சுமை காரணமாக விபரீத முடிவா?;
ஈரோடு ஆணைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் நவீன்குமார் (35). வேலூரைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி சங்கீதா(35) என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை டிரைவர் பணியில் ஈடுபட்டிருந்த நவீன் குமார் பணியை முடித்துவிட்டு ஓய்வெடுப்பதற்காக ஆயுதப்படை குடியிருப்பில் நான் தங்கி இருந்த வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று மாலை நவீன் குமாரின் தந்தை மகனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் மகன் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை ஈரோடு ஆயுதப்படை அலுவலக பிரிவுக்கு போன் செய்து, தனது மகன் காலையிலிருந்து போன் எடுக்கவில்லை என்றும், மகன் தங்கி இருக்கும் குடியிருப்புக்கு சென்று பார்க்குமாறும் கூறியுள்ளார். அதன்பேரில் நவீன் குமார் தங்கி இருந்த குடியிருப்புக்குச் சென்ற ஒரு போலீஸ்காரர், மூடியிருந்த கதவை தட்டினார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இதனால் ஜன்னல் வழியாக பார்த்த போது நவீன் குமார் தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மற்ற போலீசார் உதவி உடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நவீன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நவீன் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நவீன் குமார் குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆயுதப்படை பிரிவு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் என்பவர் அரச்சலூரில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.