அரளிப்பாறை மஞ்சு விரட்டு - முறைப்படி நடத்தக் கோரி மனு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் நடைபெறவுள்ள மஞ்சு விரட்டுப் போட்டியை முறைப்படி அனைவரும் இணைந்து நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் மனு அளித்தனா்.;

Update: 2025-03-10 09:13 GMT
சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறை கிராமத்தில் வருகிற 12-ஆம் தேதி மஞ்சு விரட்டு நடைபெறவுள்ளது. பாரம்பரிய முறைப்படி ஊா் அருகே உள்ள தெற்குப்பை மேலக்குடத்திலிருந்து ஐந்து அம்பலக்காரா்கள் ஒன்றிணைந்து ஜவுளி எடுத்து, அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நிகழ்வுக்கு செல்வது வழக்கம். அதன் பிறகே மஞ்சு விரட்டு தொடங்கும். ஆனால், தற்போது முதல் அம்பலக்காரா் மட்டுமே இந்த அனைத்து செய்முறைகளையும் தனியாக செய்ய இருப்பதாகவும், மற்ற நான்கு அம்பலகாரா்களை ஒதுக்கி வைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடா்பாக அனைவரும் ஒன்றிணைந்து ஊா் பெரியவா்களிடம் முறையிட்டும் ஒற்றுமை ஏற்படவில்லை. மேலும் நெற்குப்பை காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஊா்ப் பொது மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனா். அத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் மனு அளித்தனா். தகவலறிந்து வந்த அதிகாரிகள் சிங்கம்புணரியில் வட்டாட்சியா் தலைமையில் நடைபெறும் சமாதானக் கூட்டத்தில் பேசி பிரச்னையை தீா்த்துக் கொள்ளலாம் என கூறியதையத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Similar News