மேம்பாலத்தில் சோதனைக்காக நிறுத்தப்பட்ட லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி

ஒரகடம் மேம்பாலத்தின் மீது செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்றனர்;

Update: 2025-03-10 10:06 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, 2022, ஜனவரியில் துவங்கியது.மூன்று ஆண்டுகளை கடந்து மந்த கதியில் நடந்து வரும் மேம்பால பணிக்காக, தடுப்புகள் அமைக்கப்பட்டதால், சாலையில் குறுகலாக உள்ளது. இதனால், படப்பை வழியே, கனரக வாகனங்கள் தடை விதிக்கப்பட்டன. வாலாஜாபாதில் இருந்து வரும் கனரக வாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார், மணிமங்கலம் வழியாக செல்ல அறிவுறுத்தினர். இந்த நிலையில், தடையை மீறி, வாலாஜாபாதில் இருந்து, ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு, தினமும் 1,000க்கும் மேற்பட்ட லாரிகள், படப்பை வழியே, வண்டலுார், தாம்பரம், சென்னை சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இதனால், படப்பை பகுதியில் மேலும் நெரிசல் அதிகரித்து, வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை, ஒரகடம் அருகே, ஸ்ரீபெரும்புதுார் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனால், 20க்கும் மேற்பட்ட லாரிகள் ஒரகடம் மேம்பாலத்தின் மீது வரிசைக்கட்டி நிறுத்தப்பட்டன. இதனால், மேம்பாலத்தின் மீது செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்றனர். இதையடுத்து, சிறிது நேரத்திற்கு பின், மீண்டும் வழக்கம் போல லாரிகள் சென்றன.

Similar News