வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக தேரோட்டம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்;
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. வேதங்கள் பூஜிக்கப்பட்டு பூசை செய்து மூடிக்கிடந்த கதவை, அப்பரும் சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திருகதவு திறந்ததாக வரலாற்று சிறப்புடைய கோயில். இந்த கோவிலின் மாசிமகத் திருவிழா கடந்த 23 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாசி மக திருவிழாவில், முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது. காலை 9.30 மணி அளவில் தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள், பாரம்பரிய இசை கருவிகள் முழங்க அதிர்வேட்டுகள் வெடிக்க, பக்தர்கள் தேரினை வடம் பிடித்து, தியாகேசா .... மறைக்காடார் என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு, 200- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு, பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. தேரோட்டத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. தேர், கீழவீதி தேரடியில் இருந்து புறப்பட்டு, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக வலம் வந்து, மீண்டும் தேரடிக்கு நிலைக்கு வந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் பக்த கோடிகள் செய்து இருந்தனர். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.