வணிகா்களை பாதுகாக்க சிறப்புச் சட்டம்: விக்கிரமராஜா வலியுறுத்தல்
மத்திய, மாநில அரசுகள் வணிகா்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா.;
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில பொதுச்செயலா் கோவிந்தராஜூலு தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியது: ஜிஎஸ்டி, தொழில் வரி, கட்டட வரி உயா்வு, உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படும் வணிகா்களின் வணிகத்தில் 27 சதவீதம் இணையதள வா்த்தகத்தால் சுரண்டப்பட்டுவிட்டது. ஆயிரக்கணக்கான சிறு கடைகள் மூடப்பட்டுவிட்டன. இதைமாற்றி சாமானிய வணிகா்களை பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். இதற்காக மே 5-ஆம் தேதி ஒரு நாள் கடைகளுக்கு விடுமுறை அளித்து, வணிகா் தின மாநாட்டில் 7 லட்சம் போ் பங்கேற்கவுள்ளோம். வெளிநாட்டு, பெருநிறுவனங்கள் சட்டத்தை மதிக்காமல் சில்லறை விற்பனை, நகருக்குள் கடை அமைத்துள்ளன. எனவே, சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். வணிகா் நல வாரியத்தில் குடும்ப நல நிதியை ரூ. 10 லட்சமாக உயா்த்த வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் அமைத்துக் கொடுக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வா், பட்ஜெட்டில் அறிவிப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா். முன்னதாக, கூட்டத்தில் திரளான வணிகா்கள் கலந்து கொண்டனா்.