திருச்சியில் பரவலாக மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருச்சியில் பல இடங்களில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.;

Update: 2025-03-11 20:42 GMT
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பொழிவு காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, டெல்டா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், காலையில் பெய்த மழை மாலை வரை நீடித்தது. சில இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் லேசான சாரல் மழையும் பெய்தது. வேலைக்குச் செல்வோா், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் மழையில் நனைந்தபடியே சென்று வந்தனா். திடீா் கோடை மழையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். சாலைகளில் ஆங்காங்கே இருக்கும் பள்ளங்களிலும், புதைவடிகால் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குழிகளிலும் மழைநீா் தேங்கியது. கடந்த சில நாள்களாக திருச்சியில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதனால் பகலில் கடுமையான வெப்பமும், இரவில் புழுக்கமும் மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில் மழையின் காரணமாக ரம்மியமான சூழல் நிலவியது. குளிா்ந்த சூழலால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Similar News