உளுந்து -பச்சை பயிர் விதைப்பு செய்த நிலத்தில் சூழ்ந்து நிற்கும் மழை நீர்
வேர் அழுகல் நோய் ஏற்படும் அபாயம்;
டெல்டா மாவட்டங்களில், கடந்த ஓரிரு நாட்களாக வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். இரவு நேரங்க ளில் வெக்கை அதிகரித்து, குறிப்பாக கோடை தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், வானிலை மையம் அறிவித்தபடி, நேற்று முன்தினம் இரவு முதல் நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை படிப்படி யாக அதிகரித்த மழை பிற்பகலில் கொட்டி தீர்த்து தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்றும் வீசியதால், வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இருந்த பொதுமக்கள், மழையால் மகிழ்ச்சி அடைத்தனர். ஆனால், இந்த திடீர் மழையால் நாகை மாவட்டத்தில், 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து, பச்சை பயிறு பாதிக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு முன், இதேபோல் பெய்த மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் உளுந்து பயிர் பாதிக்கப்பட்டுள்ளது, விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, கீழ்வேளூர் மற்றும் திருக்குவளை வட்டத்துக்குட்பட்ட ஆதமங்கலம், தென்மருதூர், கோயில்கண்ணபூர், சாட்டியக்குடி கொடியாலத்தூர், தென்சாரி, கோவில்பத்து உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உளுந்து மற்றும் பச்சை பயிர்கள் பூக்கள் பூத்து காய்கள் வைத்துள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் விட்டுவிட்டு பெய்த கன மழையால், உளுந்து, பயறு விதைப்பு செய்த வயல்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த வாரம் பெய்த மழை காரணமாக பயிர்களில் தண்ணீர் தேங்கி பின்னர் வடிந்த நிலையில், பெரும்பாலான பயிர்கள் மஞ்சள் நோயினால் தாக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக, வயலில் தண்ணீர் நேங்கி வேர் அழுகல் நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வறட்சியை தாங்கி வளரும் உளுந்து பயிறு 2-வது முறையாக மழையில் மூழ்கியுள்ளதால், பாதிப்பு குறித்து வேளாண் துறை ஆய்வு செய்து, உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.