மாணவர்கள் விளையாட்டிலும் தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவுரை.
மாணவியர்கள் கல்வியோடு விளையாட்டிலும் தங்களது தனி திறமைகளை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மாணவியர்களுக்கு அறிவுரை.;
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் இன்று மாவட்ட ஆட்சியர் விளையாட்டு விழாவினை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியோடு விளையாட்டு துறையிலும் இளைஞர்கள் சாதனைபுரிய வேண்டுமென்று இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியினால் தமிழ்நாடு பிற மாநிலங்களை காட்டிலும் விளையாட்டு துறையில் உலகளவில் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகிறது. தமிழ்நாட்டில் விளையாட்டு துறை என்பது நகரம் முதல் கிராமம் வரை எல்லா இடத்திலும் பறந்து விரிந்து இருக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் தொடர்ந்து எடுத்து வருகிறார். அந்தவகையில், 2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் "டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்" கீழ் 86 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 322 ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு திறன் மேம்படும். மேலும் தற்போதைய இணைய உலகில் செல்போன் பயன்பாடு மற்றும் மன அழுத்தம் காரணமாக இளைஞர்கள் உடல்நலன் மற்றும் மன நலன் பாதிப்படைவது குறைக்கப்படும். விளையாட்டினால் இளைஞர்கள் மனநலன் மேம்படும். விளையாட்டு உபகரணங்களை முறையாக பயன்படுத்தி கொண்டு பல்வேறு வெற்றிகளை நம் மாவட்டத்திற்கு சேர்த்திட வேண்டும். விளையாட்டு தான் நம் உடல் நலத்திற்கு அடித்தளம். இளைஞர்கள் தனது ஓய்வு நேரங்களை விளையாட்டில் செலுத்திட வேண்டும். இந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி கிராமங்கள் இருக்கக்கூடிய இளைஞர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் புத்துணர்ச்சியோடும் இருக்க வேண்டும்.மாணவியர்கள் கல்வியோடு விளையாட்டிலும் தங்களது தனி திறமைகளை மேம்படுத்தி கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நாமக்கல் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி துளசிமதி முருகேசன் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று நம் மாவட்டதிற்கு பெருமை சேர்ந்துள்ளார்கள். மாணவ, மாணவியர்களின் ஆக்கப்பூர்வமான மனம் மற்றும் உடல் ஆரோகியத்திற்கு விளையாட்டுகள் முக்கியமானதாகும். மாணவர்கள் வாழ்வில் தோல்விகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகளில் விளையாட்டு அனுபவம் அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் மா.கோவிந்தராசு, முது முனைவர் சர்மிளா பானு, முனைவர் புவனேஷ்வரி, உடற்கல்வி இயக்குநர், இரா.கோபிகா, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.