பஸ் ஸ்டாண்டில்குடிநீரின்றி தவிக்கும் பயணிகள்
ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர்;
ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து நாமக்கல், ராசிபுரம், சேலம், இளம்பிள்ளை, சங்ககிரி, திருச்செங்கோடு, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு செல்ல 95 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் 1500 பயணிகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால் குடிநீர் வசதி செய்துதரப்படாததால் ஏழை பயணிகள் பலர் குடிநீருக்காக கடைகளில் பரிதாபமாக கெஞ்சுகின்றனர். மேலும் பலர் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இலவச கழிப்பிட வசதியில்லாத காரணத்தால் பஸ்கள் வந்து செல்லும் பாதையிலும் பஸ் நிலையம் அருகே உள்ள திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் துப்புரவு பணியாளர்கள் தினமும் குப்பையை அகற்றாத காரணத்தால் பஸ் நிலையம் முழுவதும் குப்பை கூலமாக காட்சியளிக்கிறது. மனநோயாளிகள் எந்நேரமும் பஸ் நிலையத்தில் அமர்ந்தும் கூச்சலிட்டவாறும் உள்ளனர். தாய்மார்கள் பாலுாட்டும் அறை நிரந்தராமாக பூட்டப்பட்டுள்ளதால் பெண்கள் குழந்தைகளுக்கு பாலுாட்ட முடியாமல் தவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்திற்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.