கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 11 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி நேற்று 12 ஆம் ஆண்டு வர்ஷாபிஷேக விழா நடந்தது. அதிகாலை நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், கணபதி ஹோமம், நவகிரக பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகமும் பின்னர் கலசபிஷேகம் நடந்தது. பூஜைகளை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரு முன்னின்று நடத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கோயில்களின் இணை ஆணையர் பழனி குமார் உட்படபலர் கலந்து கொண்டனர். விழாவில் அம்மனுக்கு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் உச்சி கால பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.