கன்னியாகுமரி மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜெயபாலன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மணிகண்டன், செயலாளர் சசி ஆகியோர் முன்னிலை வகித்தினர். ஆர்ப்பாட்டம் குறித்து பொதுச்செயலாளர் கிரிஷ் கூறுகையில், - அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் திராவிட மாடல் அரசை கண்டித்தும், போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் தனியார் மினிபஸ் களை இயக்கும் தூரத்தை 25 கிலோ மீட்டராக அதிகப்படுத்துவதை கைவிடக் கேட்டும், போக்குவரத்து கழகங்களில் 25 ஆயிரம் நிரந்திர பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ, நேரடி போட்டித் தேர்வு வழியாக தொழிலாளர்களை நியமன செய்ய கேட்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பொருளாளர் ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.