திருவாரூர் நகராட்சியுடன் ஊராட்சி இணைப்பை கண்டித்து மக்கள் போராட்டம்
திருவாரூர் நகராட்சியுடன் பெருந்தரக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.;
அண்மையில் திருவாரூர் நகராட்சியை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தில் சுற்றியுள்ள ஊராட்சிகளான புலிவலம், வேலங்குடி, பெருந்தரக்குடி, தேவர்கண்ட நல்லூர், பெருங்குடி, அம்மையப்பன், காட்டூர், கீழக்காவதுகுடி உள்ளிட்ட ஊராட்சிகளை இணைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. பெரும்பான்மையாக விவசாய கூலி மக்கள் வாழ்ந்து வரும் கிராமங்களை நகராட்சி உடன் இணைப்பதால் 100 நாள் வேலை, இலவச வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவை பறிபோகும் என குற்றம் சாட்டி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்தரக்குடி கிராம மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த முடிவை அரசு கைவிடும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.