விடுதி வார்டன் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி பார்வைத்திறன் குறையுடைய மாணவ, மாணவிகள் போராட்டம்
மாணவ, மாணவிகள் போராட்டம் ;

தஞ்சாவூர் மேம்பாலம் பார்வைத் திறன் குறையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி பெண் வார்டனை மாற்றியதை கண்டித்து 150 மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வைத் திறன் குறை உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 100 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இப்பள்ளியுடன் விடுதியும் இணைந்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே பார்வைத் திறன் குறையுடையோருக்கான மாணவ, மாணவிகள் தங்கி படிக்கும் ஒரே பள்ளி இதுதான். இங்கு கடந்த ஆறு ஆண்டுகளாக வைரவல்லி(40) என்பவர் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர் மாணவ, மாணவிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வந்துள்ளார். தன் சொந்த மகன், மகள் போல் மாணவ, மாணவிகள் நலனில் அக்கறை கொண்டு இருந்து வந்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகளுக்கு வைரவல்லி மீது மிகுந்த பாசம் இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் வார்டனாக பணியாற்றி வந்த அனிதா (40) என்பவரை தற்போது இப்பள்ளிக்கு வார்டனாக மாற்றம் செய்து உள்ளனர். வைரவல்லியை திருச்சிக்கு மாற்றம் செய்து உள்ளனர். இத்தகவல் அறிந்த மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் சாப்பிடாமல் போராட்டம் செய்துள்ளனர். வார்டன் வைரவல்லியை மாற்றம் செய்யக்கூடாது என தெரிவித்து வந்த நிலையில் மாணவ, மாணவிகளை சமாதானப்படுத்தி பள்ளி ஆசிரியர்கள் சாப்பிட வைத்துள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை காலை வகுப்புகளை புறக்கணித்து 150 மாணவ, மாணவிகளும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து வார்டன் வைரவல்லியை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகள் தரப்பில் கூறுகையில், வார்டன் வைரவல்லியை பணியிட மாற்றம் செய்தால் தேர்வுகள் எழுதாமல் புறக்கணிப்போம். கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வரும் வைரவல்லி எங்களுக்கு அப்பா, அம்மா போன்று மிகுந்த பாதுகாப்புடன் இருந்து வந்தார். எங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களிலும் அவர் உறுதுணையாக இருந்து வந்தார். இந்நிலையில் அவரைப் பணியிடமாற்றம் செய்துள்ளனர். இந்த பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்" இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.