பேராவூரணியில் பேருந்து நிழற்குடை, சென்டர் மீடியனில் மின்விளக்கு அமைக்க  கோரிக்கை 

கோரிக்கை;

Update: 2025-03-20 11:44 GMT
தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி பேரூராட்சி 11 ஆவது வார்டு முதன்மை சாலை, பட்டுக்கோட்டை சாலையில் பேருந்து நிழற்குடை மற்றும் சென்டர் மீடியனில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகாலட்சுமி சதீஷ்குமார்  பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.  அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது , "பேராவூரணி பேரூராட்சி 11 ஆவது வார்டு முதன்மை சாலை மற்றும் பட்டுக்கோட்டை சாலையில் பேருந்து நிழற்குடை இல்லாமல் பேருந்துக்காக காத்திருக்கும் பெரியோர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை விரிவாக்கத்தின்போது பழமையான மரங்கள் வெட்டப்பட்டதால் சாலையில் நிழல் என்பதே இல்லாத நிலை உள்ளது. கோடைகாலம் துவங்கிய நிலையில்  வெயிலின்  தாக்கம் அதிகரித்துள்ளதை கருத்தில்  கொண்டு உடனடியாக இரண்டு இடங்களிலும் பேருந்து நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை விரிவாக்கம் செய்து சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு  இரண்டு வருடங்களை கடந்தும்  பலமுறை கோரிக்கை விடுத்தும் செயல்படுத்தாமல் உள்ள சென்டர் மீடியனில் போதிய  மின்விளக்குகள் இல்லாததால்  இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.  மேலும் வயதான பெரியோர்கள் வாகனங்கள் ஓட்ட முடியாமலும் சாலையை கடக்க முடியாமலும் சிரமப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றித்தர வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார் .

Similar News