தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கம்

பன்னாட்டு கருத்தரங்கம்;

Update: 2025-03-20 11:54 GMT
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை நடத்திய சீனக் கவிஞர் யூசி அறக்கட்டளை விழாவில், "திருக்குறளில் கருத்தியல் மரபுகளும் மாற்றங்களும்" என்ற தலைப்பிலான இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.  பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர், முனைவர் மருத்துவர் பெ.பாரதஜோதி தலைமை வகித்தார். இலக்கியத்துறைப் பேராசிரியர் பெ.இளையாப்பிள்ளை வரவேற்றார். இலக்கியத்துறைத் தலைவர், பேராசிரியர் ஜெ.தேவி நோக்கவுரையாற்றினார்.  பல்கலைக்கழகப் பதிவாளர் கோ.பன்னீர்செல்வம், மொழிப்புல முதன்மையர் பேராசிரியர் ச.கவிதா, சிங்கப்பூர் பிடோக் பாடசாலையில் மூத்த ஆசிரியர், தமிழ்மொழி & இலக்கியத் துறைத் தலைவர் து.உமாமகேஸ்வரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.   கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியரும், மனோன்மணியம் சுந்தரனார் திராவிட பண்பாட்டுப் பன்னாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநருமான பேராசிரியர் ப.ஜெயகிருஷ்ணன், திருக்குறளில் மலையாள மொழிபெயர்ப்புகள் குறித்து உரையாற்றினார். அவர் பேசுகையில், "இதுவரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே தமிழ் நூல் திருக்குறள். விவிலியத்திற்கு அடுத்த படியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலூம் இதுவேயாகும். இதுவரை பதினைந்திற்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் மலையாள மொழியிலிருந்து திருக்குறளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைக்கூவுக்கு அடித்தளமிட்டது தமிழ் மொழியில் அமைந்த திருக்குறளே" என்றார்.   தொடக்க விழாவின் நிறைவாக இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் கு.பிரதீபா நன்றி கூறினார். இலக்கியத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வன் ச.வாசுதேவன் நிகழ்வை  நெறியாள்கை செய்தார்.  கருத்தரங்கில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.  வியாழக்கிழமை நிறைவடைந்த இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், புதுவைப் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நங்யாங் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய கல்வி அமைச்சு, சிங்கப்பூர் பிடோக் பாடசாலை ஆகிய தமிழகம் மற்றும் அயல்நாட்டு கல்லூரிப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 27 பேர் கட்டுரையாளர்களாக கலந்து கொண்டு, திருக்குறள் பற்றி ஆய்வுக்கட்டுரைகளை வழங்கினர்.

Similar News