கந்து வட்டி பிரச்னையில் முதியவர் உயிரிழப்பு: திமுக நிர்வாகி கைது
திமுக நிர்வாகி கைது;
தஞ்சாவூரில் கந்து வட்டி பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து முதியவர் உயிரிழந்ததால், திமுக நிர்வாகி செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மானோஜியப்பா வீதியைச் சேர்ந்தவர் பெரிய பப்பு என்கிற ஏ.கிருஷ்ணமூர்த்தி (45). திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியில் தஞ்சாவூர் மாநகர அமைப்பாளராக உள்ள இவர் வடக்கு வாசல் பகுதியில் மதுபானக் கூடம் நடத்தி வருகிறார். இந்த மதுபானக் கூடத்தில் ஒரு பகுதியில் தஞ்சாவூர் விளார் புறவழிச்சாலை பகுதியைச் சேர்ந்த ஜி. பத்மநாபன் (59) மாதம் ரூ.15 ஆயிரத்துக்கு உள் வாடகை செலுத்தி கடை நடத்தி வந்தார். இதனிடையே, கொரோனா ஊரடங்கு காரணமாக வருவாய் இல்லாததால், கிருஷ்ணமூர்த்திக்கு பத்மநாபனால் வாடகை செலுத்த முடியவில்லை. இந்நிலையில், பத்மநாபனிடம் கிருஷ்ணமூர்த்தி வாடகை நிலுவைத் தொகையுடன், வட்டி சேர்த்து ரூ.14.50 லட்சம் கேட்டு வற்புறுத்தி வந்தாராம். இது தொடர்பாக காமராஜர் சந்தை அருகே மார்ச் 5 ஆம் தேதி பத்மநாபனிடம் வீட்டை எழுதித்தருமாறும் அல்லது வட்டியுடன் பணத்தைக் கொடுக்குமாறும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கூறினராம். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பத்மநாபன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப் பதிந்து கிருஷ்ணமூர்த்தியை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தியின் தம்பி சின்ன பப்பு என்கிற முத்துக்குமார் (41), தத்தோஜியப்பா சந்தைச் சேர்ந்த ஜெ.பாஸ்கர் (50) ஆகியோரையும் தேடி வருகின்றனர். இதனிடையே, பத்மநாபனின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உடற்கூறாய்வு அறிக்கையில் பத்மநாபன் தாக்கப்பட்டதால் உயிரிழந்தாரா? அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இறந்தாரா? என்பது தெரிய வரும் என்றும், அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.