கொலையுண்ட நபருக்கு நினைவு தினம் போலீசார் இருதரப்பு பகுதியிலும் கொடி அணிவகுப்பு
மயிலாடுதுறையில் நடைபெற்ற இரண்டு கொலை சம்பவங்களின் தொடர்ச்சியாக மீண்டும் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் மாவட்ட எஸ்.பி. தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு:-;
. மயிலாடுதுறையில் கடந்த 2022-ஆம் ஆண்டு கொத்தத்தெருவைச் சேர்ந்த வன்னியர் சங்க பிரமுகர் கண்ணன் என்பவர் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பலர்; கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த நிலையில், அவர்களில் ஒருவரான மயிலாடுதுறை கலைஞர் நகரை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தலித் இளைஞரான அஜித்குமார் என்பவர் கடந்த ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி பழிக்குப்பழி சம்பவமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அஜித்குமாரின் முதலாமாண்டு நினைவுதினம் கலைஞர் நகர் பகுதியில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலைஞர் நகர், கொத்தத்தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், மயிலாடுதுறையில் சட்ட ஒழுங்கு பராமரித்தல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். அஜித்குமாரின் உறவினர்கள் வசிக்கும் கலைஞர் நகர் அமைந்துள்ள கச்சேரி சாலை பகுதியில் இருந்து, கண்ணன் வசித்த கொத்தத்தெரு வரையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில், மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், ஊர்காவல்படை வீரர்கள் என 120 பேர் இந்த கொடி அணிவகுப்பில் அணிவகுத்து சென்றனர். இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு போக்கிரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நடப்பாண்டில் 29 சரித்திர பதிவேடு போக்கிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், 110 சரித்திர பதிவேடு போக்கிரிகள்மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.