திராவிடர் விடுதலைக் கழக மாநாடு
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 500 கூட்டங்கள் நடத்தப்பட்டு, மயிலாடுதுறையில் நிறைவு மாநாடு:- பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்:-;
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை, சேலம், விழுப்புரம், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய ஐந்து முனைகளில் இருந்து புறப்பட்டு தமிழ்நாடு முழுவதும் மார்ச் 15 முதல் மார்ச் 22 வரை 500 கூட்டங்கள் நடத்தப்பட்டு, அந்த பரப்புரை பயணத்தின் நிறைவு மாநாடு ‘பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்” என்ற தலைப்பில் மயிலாடுதுறையில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்து மாநாட்டு தீர்மானங்களை வாசித்தார். பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் கருத்துரை வழங்கினார். இதில், தமிழ்மண் தன்னுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் உள்ளிட்ட பலர் பெரியாரின் கொள்கைகளை ஆதரித்து பேசினர். இக்கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு: சனாதன கொள்கைகளுக்கும், அந்த கொள்கைகளுக்கு துணைபோகும் போலி தமிழ் தேசியவாதிகளை கண்டித்தும் ஏப்ரல் 21-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்பாட்டங்களை நடத்துவது, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில உரிமை போராட்டங்களை நடத்துவதை பாராட்டி வரவேற்பது, பழனியில் உலக முருகன் மாநாடு, வரலாற்றிலேயே இல்லாத வகையில், மகாசிவராத்திரி விழா கொண்டாட்டம் உள்ளிட்ட அறநிலையத்துறையின் எல்லைமீறும் செயலுக்கு கண்டனத்தை பதிவு செய்வது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் 24 மட்டும் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில், அர்;ச்சகர் பதவிக்காக பயிற்சி பெற்று, நீண்டகாலமாக காத்திருப்பவர்களுக்கு, நீதிமன்ற தடைகளை நீக்கி அடுத்தடுத்த கோயில்களில் பணி வழங்க வேண்டும், தொலைக்காட்சிகளில் வரன்தேடும் விளம்பரங்களில் வெளிப்படையாகவே ஜாதி அடையாளம் பேசப்படுவதை தடை செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் சமூக நல்லிணக்கம் பேணும் கிராமத்துக்கு ரூ.1கோடி பரிசு வழங்கியதை வரவேற்பது, தீண்டாமையை பின்பற்றும் கிராமங்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோருவது, ஆன்மீக சொற்பொழிவு, பிராமணர் மாநாடுகளில் முன்வைக்கும் சமத்துவம், சமூக நீதிக்கு எதிரான உரைகள் ஆற்றப்படும் இடங்களில் எதிர்ப்பினை பதிவு செய்யுமாறு இளைஞர்களை கேட்டுக்கொள்வது, பெரியார் மீதான ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பியதற்காக புதிய தண்டனைச் சட்டம் விதிகள் 192, 196, 352, 353 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சீமான், அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்து இரண்டு மாதங்கள் கடந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், புகார் அளித்தவர்கள், உரிய காவல்துறை அதிகாரிகளையும் எதிர் மனுதாரர்களாக குறிப்பிட்டு தனி வழக்காக உரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.