தளவாய்பட்டி பால்பண்ணை பகுதியில்சாலை, கால்வாய் அமைத்து தரப்படும்
பொதுமக்களிடம், அருள் எம்.எல்.ஏ. உறுதி;
சேலம் மேற்கு சட்டசபை தொகுதி தளவாய்பட்டி பகுதியில் ஆவின் பால்பண்ணை அமைந்துள்ளது. இந்த வழியாக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் அங்கு ரவுண்டானா அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அருள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சத்யா நகர், எம்.வி.எஸ்.நகர் பகுதியில் சாக்கடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லவில்லை என பொதுமக்கள், அருள் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர். அவர் நேற்று காலை அங்கு சென்று ஆய்வு செய்து கழிவுநீர் வெளியேறவும், சேதமடைந்த சாலையை அமைத்து கொடுக்கவும் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளரை நேரில் அழைத்து பணிகளை செய்து கொடுக்க கேட்டுக்கொண்டார். இதேபோன்று திருப்பதி நகர், சத்யா நகர் பகுதியில் சீரான குடிநீர் கிடைக்கவும் அருள் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்தார். அப்போது, பா.ம.க. மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தன், தங்கராஜ், ஒன்றிய செயலாளர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்து அருள் எம்.எல்.ஏ. கூறுகையில், நாளை (செவ்வாய்க்கிழமை) சட்டசபையில் நான் தொகுதி பிரச்சினைகள் குறித்து பேச உள்ளேன். அதுதொடர்பான பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் 487 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்தும் துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கடிதம் வழியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருத்துக்களை கூற சட்டசபை உறுப்பினர் அலுவலகத்துக்கு வந்தவர்களுக்கு நன்றி என்றார்.